சனி, 30 அக்டோபர், 2010

சிவசேனா -- மூன்றாம் எடிசன் - 1

ரு வாரங்களுக்கு  முன், ஒரே மாதிரியான இரு செய்திகளை ஒரே நேரத்தில் நாளிதழ்களில் படிக்க நேர்ந்தது. வடகொரியாவின் தலைவர் (கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஆட்சிக்கும் அவரே தலைவர்) 'கிம் ஜோங் இல்' தமது வாரிசாகத் தம் மகன் 'கிம் ஜோங் உன்'னை நியமித்ததை அவரது மற்றொரு மனைவிக்குப் பிறந்து தந்தையை விட்டுப் பிரிந்திருக்கும்  மூத்த மகன்  'கிம் ஜோங் நாம்' விமர்சித்திருந்தார். எனினும் தம் தந்தை எடுத்த முடிவிற்குக் கட்டுப்படுவதாகவும்  நாட்டுக்குத் தலைமை தாங்கும் பெரும் பொறுப்பில் தம்பிக்கு உதவத் தயாராக இருப்பதாகவும் சொன்னார்.

இந்தச் செய்தியைப் படித்தபோது, சின்னஞ்சிறு அளவில் இந்தியச்  சாயலிருப்பதாகத்  தோன்றியது. சிவசேனா தலைவர் பால்தாக்கரேயின் பேரனும் கட்சியின் செயல் தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகனுமான ஆதித்ய தாக்கரே சிவசேனாவின் இளைஞர் அணியான 'யுவசேனா'வுக்குத் தலைவராகிறார்  என்ற அடுத்த செய்தி என் எண்ணத்தை உறுதிப்படுத்தியதை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள்.

வடகொரியத் தலைவர் தம் தந்தையான 'கிம் இல் ஸங்'ஙிடமிருந்து தலைவர் பொறுப்பை ஏற்று இப்போது தம் மகனுக்குத் தலைவர் பொறுப்பை அளிப்பதுபோல் பால்தாக்கரே -- உத்தவ் தாக்கரே -- ஆதித்ய தாக்கரே என முறையாக வருவதாகத் தோன்றியது.

இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரமான பம்பாய் (மும்பை)நகரத்தில் தொழில் வாய்ப்புகள் மிகுந்திருந்தன. இதனால் மகாராஷ்டிர மாநிலத்தின் பல பகுதிகளில் வாழ்ந்தவர்களும் தென்னிந்தியர்களும்  குஜராத்திகளும் வட மாநிலத்தவரும் பம்பாய் நகரத்தில் குடியேறிப் பலதரப்பட்ட வேலைகளிலும் வியாபாரங்களிலும்  ஈடுபட்டனர். குறிப்பாகத் தமிழர்களும் மலையாளிகளும் வெள்ளைக் காலர் வேலைகளைக் கைப்பற்ற, வட மாநிலத்தவர் அடிமட்ட  வேலைகளை ஆக்கிரமித்துக் கொண்டனர்...

இந்தியாவின் மான்செஸ்டர் ஆன பம்பாயில்  கம்யூனிஸ்ட்களின் செல்வாக்கு மிகுந்திருந்த அக்காலகட்டத்தில் தொழிற்சங்கங்களால் வேலை நிறுத்தங்களும் போராட்டங்களும் கதவடைப்புகளும் நடந்தன. அதனால் பல தொழில்களும் அந்நகரத்தை விட்டு விலக்கிக் கொள்ளப் பட்டன. இதனால் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை இல்லாமல் ஆனது. வெள்ளைக் காலர் வேலைகளும் இல்லை; சிறு/ பெரு  வியாபாரங்களும் இல்லை; தொழிற்சாலைகளிலும் வேலை இல்லை; வருமானமும் இல்லை. விரக்தியில் இருந்த பலர் குற்றச் செயல்களில் ஈடுபட்டனர். தொழிலதிபர்களிடம்  'ஹப்தா' எனப்படும் பாதுகாப்புக் கட்டணம் வசூலிக்கத் தொடங்கினர்.

மகாராஷ்டிர மாநிலம் உருவான 1960 ஆம் ஆண்டு, தம்மால் நிறுவப்பட்ட "மம்ரிக்" எனும் இதழில், பிற மாநிலத்தவரால் - குறிப்பாகத் தமிழர்களால்-- பறிக்கப்படும் மராத்தியனின் வேலை வாய்ப்பையும் மராத்திய இளைஞனுக்கு இழைக்கப்படும் அநீதியையும் உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்தில் நிரப்பி இளைஞர்களைத் திரட்டி அவர்களின் பேராதரவால்  சிவசேனாவைத் தொடங்கினார் பால்தாக்கரே!

பம்பாயின் மண்ணின் மைந்தர்களுக்கு உரிய நீதியும் வாய்ப்பும் பெற்றுத் தருவோம் எனச் சொல்லி 1966 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பால்தாக்கரேயால் 'சிவசேனா' துவங்கப்பட்டது. மாநில உரிமை எனத் துவங்கப்பட்டு பிற மாநிலத்தவர் மீது வெறுப்பு என வளர்க்கப்பட்டது சிவசேனா! தென்னிந்தியர்கள் குறிவைக்கப்பட்டுத் தாக்கப்பட்டனர்; கல்வியறிவுடன் வந்து,  சிறிய சம்பளத்தில் கூடத் தயக்கமின்றி  வேலையில் சேர்ந்திருந்த தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.

சிவசேனா துவக்கப்பட்ட காலத்தில் இருந்து எண்பதுகள் வரை அவ்வமைப்பைப் பாராட்டிச் சீராட்டி வளர்த்தது மகாராஷ்டிராவின் காங்கிரஸ் கட்சியே! பம்பாயில் செல்வாக்குப் பெற்றிருந்த கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகச் சிவசேனாவையும் அதன் ரவுடித்தனத்தையும் பாதுகாத்தது காங்கிரஸ் அரசுதான். காங்கிரஸ் மட்டுமின்றிக் கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் பால்தாக்கரேயின் தயவை நாடி நின்றன.

"மகாராஷ்ட்ரா மராத்தியருக்கே" என்ற இனவெறியுடன் துவங்கப்பட்ட சிவசேனாவின் ரவுடியிஸப் 'பரிணாமம்'  இந்துத்துவ சக்திகளுடன் வெளிப்படையாகக்  கைகோர்த்த பின் முஸ்லிம் எதிர்ப்பு என்ற கோர முகத்துடன் காவிப் 'பரிமாணம்' பெற்றது. 1970 ஆம் ஆண்டு மே மாதத்தில் சிவசேனா தலைமையில்  பீவண்டியிலும் ஜல்கோனிலும்  முஸ்லிம்களுக்கு எதிராக நடத்திய கலவரத்தில் எண்பத்திரண்டுபேர் கொல்லப்பட்டனர்; முஸ்லிம்களுக்குச் சொந்தமான  கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அழிக்கப்பட்டன்.

1974 ஆம் ஆண்டு, தலித்பேந்தர் இயக்கத்துக்கு எதிராகக் கலவரத்தில் ஈடுபட்டு அதன் தலைவரான பகவத் ஜாதவைக்கொன்றது சிவசேனா!.

சமுதாய முன்னேற்ற அமைப்பு என்று கூறிக்கொண்டாலும் 1967 தேர்தலில் மறைமுகமாகக் கலந்து கொண்டது சிவசேனா. நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்ட வி.கே. கிருஷ்ணமேனன் மலையாளி என்பதாலும் எஸ்.ஏ. டாங்கே கம்யூனிஸ்ட் என்பதாலும் ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் சோஷலிஸ்ட் என்பதாலும் அவர்களைத் தோற்கடிக்கக் களமிறங்கியது. எனினும் கம்யூனிஸ்டும் சோஷலிஸ்டும் அத்தேர்தலில் வெற்றிபெற்றனர்..

அவ்வாண்டிலேயே தாணா நகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு 17 இடங்களில் வென்று தலைவர் பதவியையும் பெற்றது சிவசேனா.  பின்னர் பம்பாய் மாநகராட்சி, சட்டசபை எனத் தேர்தல்களில் போட்டியிட்டு முழுநேர அரசியலில் குதித்தது.

மராத்திய இளைஞர்களிடையே கல்வியறிவும் விழிப்புணர்வும் அதிகரித்து அவர்களும் பல்வேறு நிறுவனங்களில் உயர் பதவிகளை அடையத் தொடங்கினர். மராத்திய மக்களின் முதன்மைப் பொழுதுபோக்கான நாடகங்களின் ஆதிக்கம் அதிகமாகி உலகியல் பார்வை விரிவு பெற்றதால் மண்ணின் மைந்தர்கள் கோஷம் தாக்குப் பிடிக்காமல் கலகலத்துப் போவதை உணர்ந்து கொண்ட பால்தாக்கரே, மிக விரைவாக முழுமையான காவிப் படையாக சிவசேனாவை மாற்றிக் கொண்டார்.

1992 ஆம் ஆண்டில் பாபர்மசூதி தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் உள்ளாடையைக் கூட விலக்கிப் பார்த்து முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்; முஸ்லிம்களின் தொழில் நிறுவனங்கள் குறிவைத்து அழிக்கப்பட்டன. இக்கலவரத்திற்கு சூத்திரதாரியான பால்தாக்கரேயையும் சிவசேனாவையும் கிருஷ்ணா கமிஷன் அடையாளம் காட்டியும் சட்டமோ நீதியோ அவர்களின் நிழலைக் கூடத் தொட முடியவில்லை என்பது அவர்களுக்குப் பெரும் பலத்தைத் தந்தது.

மராத்தியரல்லாதவர், முஸ்லிம்கள், தலித்கள் எனும் மூன்று பிரிவினரையும் தாக்குவதும் விரட்டுவதுமே கொள்கை என்றாகி, மெல்ல மெல்லத் தொழிற்சங்கங்களையும் கைப்பற்றி, அரசியலில் ஈடுபட்டு, அரசு, காவல்துறை, தொழில்கள், திரைப்பட உலகம் என அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தும் மகாராஷ்ட்ராவின் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டது சிவசேனா.

பால்தாக்கரேயின் ரவுடித்தனத்தால் கவரப்பட்ட பாமக ராம்தாஸ்கூட, "இலங்கையில் கொல்லப்படும் இந்துத் தமிழர்களைக் காக்க" என்ற போர்வையில் இவர்களை வைத்துக் கூட்டம் நடத்தினார். எந்தத் தமிழர்களையும் மலையாளிகளையும் பால்தாக்கரேயும் சிவசேனாவும் பம்பாய் நகரத்திலிருந்து அடித்து விரட்டினார்களோ, அந்தத் தமிழர்களும் மலையாளிகளும்  சிவசேனாவின் காவிப்பரிமாணத்தால் தத்தம் மாநிலத்தில் சிவசேனாவின் கிளைகளை அமைத்துள்ளனர் என்பது வரலாற்றுக்குச் செய்யும் துரோகம் என்பதை மறுப்பதற்கில்லை.

(மீதி அடுத்த வாரம்............)

சனி, 23 அக்டோபர், 2010

வரும் தேர்தலில் தி மு க ஆட்சியைப் பிடிக்கத் தடையாய் இருப்பவை


முன்னர் அலசப்பட்டவற்றில் இரண்டு செய்திகளை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம்:

1. எதிர்வரும் தேர்தலில் தி மு க வென்று, எதிர்பார்த்துள்ளபடி கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டால் மு.க. ஸ்டாலின் முதல்வராகும் வாய்ப்பு.


2. அனுதாப அலை ஏதும் வீசாவிட்டால் இப்போதுள்ள கூட்டணியால் ஜெயலலிதா ஆட்சியைப் பிடிக்க முடியாது.


சென்ற வாரம் மதுரையில் திரட்டப்பட்ட மாபெரும் மக்கள் வெள்ளம், கடந்த அலசலில் சொல்லியிருந்ததைப்போல ஜெயலலிதாவுக்கு மயக்கத்தைத் தந்து விட்டது என்பது, “ஐம்பது லட்சம்” என்ற அவரது பேச்சில் தெளிவாகிறது.  அதுவும் எதிர்க்கட்சிகளின் சதியால் 75% மக்கள் வராமலேயே ஐம்பது லட்சம் மக்கள் அவருக்காகக் கூடினராம்..


"மதுரைக்கு வந்துபார்; கொலை செய்வோம்" என்று மிரட்டல் கடிதங்கள் வந்ததால் தென் மாவட்டத் தொண்டர்கள் திரண்டும் மக்கள் திரட்டப்பட்டும் மதுரையில் கூடினர்.  "ஜெயலலிதா தம் உரையைப் படித்துக்கொண்டிருக்கும் போதே மக்கள் அவரவர் ஊருக்குப் புறப்பட்டுவிட்டனர்"  என்றும் "டாஸ்மாக் மதுக்கடையை உடைத்து மது பாட்டில்களைக் கொள்ளையடித்துக் குடித்தனர்" என்றும் ஊடகங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் பார்த்தால், மதுரையில் கூடியதில் பாதி, கட்சிக்காரர்கள் அல்லர்; திரட்டப்பட்ட கூட்டம் என்பதில் ஐயமில்லை.  தொண்டர்களை உசுப்பேற்றிக் கூட்டத்தைத் திரட்டுவதற்காகக்கூட மிரட்டல் கடிதங்கள் தயாரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டிருக்கலாம் என்று ஆளுங்கட்சிக்காரர்கள் கூறும் கருத்து தள்ளிவிடத் தக்கதன்று. தாக்கும் எண்ணம் உள்ளவர்கள் பல முறை மிரட்டல் கடிதங்களை அனுப்பிக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பது சாதாரண அறிவுடையோருக்கும் புரியும்.

மாபெரும் கூட்டத்தைக் கூட்டித் தம் செல்வாக்கைக் காட்டி, அதன் மூலம் புதிய கூட்டணியை உருவாக்குவதுதான் திட்டம் என்றால் ஜெயலலிதா அத்திட்டத்தின் முதல் கட்டத்தில் ஜெயித்து விட்டார் என்று ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.


ஏனெனில் நாள்தோறும் மாறும் வானிலைபோல் அரசியல் சூழ்நிலையும் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கிறது. நேறறுப்போல் இன்றில்லை. தமிழகத்தை ஆளும் தி மு க தன் வலிமையில் வைத்திருக்கும் நம்பிக்கை பொய்த்துப் போகாமல் இருக்க வேண்டுமானால் ஆட்சியிலும் கட்சியிலும் கருணாநிதி கூடுதல் கவனத்தைச் செலுத்த வேண்டும்.

தம்மால் அறிமுகப்படுத்தப்பட்டுச் செயல்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்களும் இலவசங்களும் மட்டுமே வாக்குகளைச் சேகரித்துத் தந்து விடும் என நம்பும் அளவுக்குக் கருணாநிதி அரசியல் அறியாதவரல்லர். அவர் அறிவித்த திட்டங்களையும் இலவசங்களையும் மக்களிடத்தில் சேர்க்கும் பணியைச் செய்யும் வருவாய்த்துறை போன்ற பல துறை அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் எதிர்பார்த்த அளவு ஊதிய உயர்வு கிடைக்காமல் ஏமாற்றத்தில் உள்ளனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கும் இவர்களுக்கும் இடையே ஊதியத்தில் உள்ள வேறுபாடும் தமிழக அரசின் பிற துறைகளின் ஊழியர்களுக்கும் இவர்களுக்கும் இடையே ஊதியத்தில் உள்ள ஏற்றத்தாழ்வும் இவர்களை விரக்தியில் வைத்துள்ளன.

அடுத்து, தமிழகத்தில் திடீரென உயர்ந்துள்ள கட்டுமானப் பொருட்களான சிமெண்ட், இரும்புக் கம்பி, செங்கல், மணல் போன்றவற்றின் கற்பனைக் கெட்டா  விலை உயர்வு, சொந்தவீடு எனும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நடுத்தர மக்களுக்குக் கடும் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் கொடுத்துள்ளது.

கருணாநிதி, எவ்வளவுதான் இலவசங்களை அள்ளி வழங்கினாலும் தேர்தலில் வாக்களிக்கச் செல்வதில் அக்கறைகாட்டும் நடுத்தர மற்றும் உயர் நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கைத் தேவையை நிறைவு செய்ய முடியா வண்ணம் அரிசி மற்றும் மளிகைப் பொருட்களின் விலையும் காய்கறிகளின் விலையும் தாறுமாறாக ஏறி வரும் நிலையை அவசர நடவடிக்கை மூலம் கட்டுப்படுத்தாவிட்டால் அவர்களின் எதிர்ப்பை எதிர்கொள்ளவேண்டிவரும். ஏழை முதல் கோடீஸ்வரன்வரை அன்றாடம் பயன்படுத்தும் வெங்காயத்தின் விலை உயர்வும்கூட இந்தியாவை ஆண்ட ஜனதாக் கட்சி ஆட்சியை இழக்க நேர்ந்த காரணங்களுள் ஒன்றாக அப்போது கூறப்பட்டதைக் கருணாநிதிக்கு நாம் நினைவூட்டத் தேவையில்லை.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும் அடிக்கடி உயரும் எரிபொருள் விலைகளால் தனியார்ப் பேருந்துகள் தம் விருப்பத்திற்கேற்பக் கட்டணங்களை உயர்த்துவதையும் தனியார்ப் பள்ளிகளின் கல்விக் கட்டண உயர்வுக் குழப்பங்களும் மின்கட்டண உயர்வும் மக்களின் அதிருப்தியைக் கூட்டுகின்றன.

இந்த அதிருப்திகள் தேர்தலில் எதிரொலிக்கும் வாய்ய்பைத் தள்ளிவிட முடியாது. ‘அடுத்த ஆட்சியும் தமதே’ எனும் தி.மு.க.வினரின் கனவு பலிப்பதற்குத் தடையாக உள்ள இவற்றை ஜெயலலிதா முறையாகப் பயன்படுத்திக் கொண்டு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வழங்கி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மற்றும் உள்ள பொதுவான வாக்காளர்களை வளைக்கலாம். கூடவே காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி முயற்சியை விடாமல் தொடரலாம். அது தி.மு.க.வுக்குக் கடும் சவாலாகவே இருக்கும்.

அதுபோல,

. . . .  அழகிரி கொடுத்து வரும் தலைவலிகள் வரும் தேர்தலில் கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.

. . . .   உட்கட்சிப் பூசலால் தி.மு.க. நொண்டியடித்தால், காங்கிரஸ்,  தி.மு.க. கூட்டணியில் தொடர விரும்பாது. வேகமாக ஓடும் குதிரையில்தான் சவாரி செய்ய எவருமே விரும்புவர்.

. . . .   அடுத்து வர இருக்கும் மத்திய அமைச்சரவை மாற்றத்தில் டெலிகாம் அமைச்சர் ராசாவின் இலாகா மாறலாம்; அல்லது பதவியே பறிக்கப்படலாம். அப்படி ஒரு நிலை வரும்போது காங்கிரஸ் தி.மு.க. உறவு ஊசலாடலாம்.         

. . . . வாய்ப்புக்காககவே காத்திருக்கும் ஜெயலலிதா மாபெரும் கூட்டத்தைக் கூட்டிக் காட்டுகிறார். முன்னர் ஜெயலலிதா சோனியாவைக் கீழ்த்தரமாகத் தனிப்பட்ட முறையில் விமர்சித்ததை சோனியா மறந்து விட்டால் அ.இ.அ.தி.மு.க. கூட்டணிப் பேச்சுக்குக் கதவு திறக்கலாம். காங்கிரஸ் கட்சியில் உள்ள இளங்கோவன் போன்ற தி.மு.க. எதிர்ப்பாளார்கள் ராகுல்காந்தியின் மூலம் இதற்கு முயலலாம்.


கருணாநிதி உடனடியாகக் களமிறங்கிக் கட்சியிலும் ஆட்சியிலும் தம் பிடியை இறுக்கி, விலைவாசிகளைக் கட்டுக்குள் கொண்டு வந்து,  உட்கட்சிப் பூசலையும் வெற்றிக்குத் தடையாய் உள்ளவற்றையும் களைந்து விட்டுக் காங்கிரஸ் கட்சியுடன் சிலவற்றில் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் இப்போதிருக்கும் கூட்டணி நிலைக்கும். ராமதாஸின் பா.ம.க.வும் இக்கூட்டனியில் இணைந்து விட்டால், மீண்டும் தி.மு.க. ஆட்சி எனும் தி.மு.க.வின் கனவு  பலிக்கும்.

சனி, 16 அக்டோபர், 2010

வரும் தேர்தலில் அ இ அ தி மு க ஆட்சியைப் பிடிக்குமா? (இறுதிப் பகுதி)

தி.மு.க, 1996 தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது, 1967 ஆம் ஆண்டு முதன்முதலாக ஆட்சியைப் பிடித்தது போன்று, தமிழ்நாட்டு வரலாற்றில் சிறப்பிடம் பெறும் நிகழ்வாகும். தி.மு.கவில் இருந்து வெளியேற்றப்பட்ட வை.கோபாலசாமி  1994 ஆம் ஆண்டில் ம.தி.மு.க எனத் தனிக்கட்சி தொடங்கி, பல மாவட்டச் செயலாளர்களையும் உற்சாகம் மிக்க தொண்டர்களையும் தம்முடன் அழைத்துச் சென்ற பின்னரும் தி மு க பலவீனப்படவில்லை. 96 இல் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அதற்குக் காரணமும் ஜெயலலிதாவே! 1991 ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி  தலைமையிலான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி உறவு கொண்டு, அவரின் மரணம் மக்களின் மனங்களில்  ஏற்படுத்திய பாதிப்பால் 164 தொகுதிகளில் வென்ற அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் அமர்ந்தது.  ஜெயலலிதா முதல்வரானார். தி மு க  சென்னையில் மட்டும் வென்று  இரண்டே இடங்களைப் பெற்றது.  அவ்விரண்டில் ஒன்று கருணாநிதி துறைமுகம் தொகுதியில் வென்ற இடமாகும்.

ஆனால் 1996  தேர்தல், முந்தைய தேர்தலின் வரலாற்றைத்  தலைகீழாகத் திருப்பியது. முதல்வர் ஜெயலலிதாவின் ஆடம்பரங்களும்  ஆணவப்போக்கும் மக்களை மட்டுமின்றி, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த அவரின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸையும் வெறுப்படையச் செய்திருந்த நிலையில்,1996 ஆம் ஆண்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது.  காங்கிரஸ்  கட்சியின் தலைவராயிருந்த பிரதமர் நரசிம்மராவ் மீண்டும் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தார். இதை விரும்பாத காங்கிரஸார் மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் எனும் தனிக்கட்சி தொடங்கி, தி மு க வுடன் கூட்டணியாகத் தேர்தலைச் சந்தித்தனர்.

அத்தேர்தலில் தி.மு.க  173 இடங்களைப் பெற்று ஆட்சியமைக்க, அ.இ.அ.தி.மு.க வெறும் நான்கே இடங்களில் வென்றது. அவற்றுள் இரண்டு தத்தம் தொகுதிகளில் தனிச் செல்வாக்குப் பெற்றிருந்த அறந்தாங்கி எஸ். திருநாவுக்கரசும் ஸ்ரீவில்லிப்புத்தூர்  தாமரைக்கனியும் வென்ற இடங்களாகும். கட்சித் தலைவியாயிருந்த முதல்வர் ஜெயலலிதாவும் தோற்றுப்போனார்.

நாடாளுமன்றத்தில் த.மா.க-தி.மு.க கூட்டணி 37 இடங்களைப் பெற்றபோது அ.இ.அ.தி.மு.கவிற்கு நாடாளுமன்றத்தில் ஓர் இடம் கூடக் கிடைக்கவில்லை.

"ஆற்றங்கரை மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே!"  ஜெயலலிதா ஆட்சியை இழந்தது மட்டுமின்றி  அவர் மீதும் அவரது அமைச்சரவை சகாக்கள் மீதும்  ஊழல் வழக்குகளும் தொடுக்கப்பட்டன. இமெல்டா மார்கோஸை நினைவுபடுத்தும் வண்ணம் காணப்பட்ட ஜெயலலிதாவின் ஆடை அணிகலன்களும் காலணிகளும் கூடக் காட்சி ஊடகங்களில் அன்றாடம் ஒளிபரப்பப்பட்டன. அந்த வழக்குகளுள் ஒன்றிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பால் கோபமுற்ற அ.இ.அ.தி.மு.க வினரால்  கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் மூவர் உயிரோடு கொளுத்தப்பட்ட கொடுமையான சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. ஆனாலும் ஜெயலலிதா தம் தவறுகளை ஒப்புக்கொள்ளாமல் கருணாநிதி மீதான தம் பகையைத் தீவிரப்படுத்தினார்.  குடும்பமோ குழந்தைகளோ இல்லாத தம்மைக் கருணாநிதியும் அரசும் சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்துவதாக மக்களிடம் சொன்னார்.

ஜெயலலிதாவின் தவறுகளையும் குறைகளையும் மக்கள் மறக்கும் வண்ணம் கருணாநிதியின் அரசியல் ஆசைகள் உருப்பெற்றதால், 2001 தேர்தலில் தி.மு.க தோற்று அ.இ.அ.தி.மு.க மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

மத்தியில் ஆண்ட வாஜ்பாயியின் பா.ஜ.க அரசுக்குக் கருணாநிதி ஆதரவு கொடுத்தார்; இது தி.மு.க.வின்  கூட்டணிக் கட்சிகளான தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை அவரிடமிருந்து விலகச் செய்தது.

1997 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் தேதி கோவையில் ஒரு முஸ்லிம் இளைஞரால் போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் கொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து முஸ்லிம்களின் மேல் விரோதம் கொண்டிருந்த சில மதத்தீவிரவாதக் குழுக்கள் நவம்பர் 29 ஆம் தேதி முதல் டிசம்பர் 1 ஆம் தேதிவரை கோவையில் நடத்திய கலவரத்தில் பத்தொன்பது முஸ்லிம்களைக் கொன்றனர்; முஸ்லிம்களின் வணிகத்தலங்களும் நிறுவனங்களும் சூறையாடப்பட்டுக் கொள்ளையடிக்கப்பட்டன. கலவரத்தை அடக்காமல், கொலை, கொள்ளை போன்ற பயங்கரக் குற்றச்செயல்களைத் தடுக்காமல் காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்தது என்றும் சில காவலர்களும் கலவரத்தில் ஈடுபட்டனர் என்றும் குற்றம் சுமத்தப்பட்டபோது, காவல்துறையைக் கையில் வைத்திருந்த முதல்வர் கருணாநிதி, "காவலர் செல்வராஜ் கொலைக்கு  எதிர்ப்புத் தெரிவித்துக் காவல்துறையினர் சீருடையில் கறுப்புபட்டை மட்டுமே அணிந்தனர்" எனக் கருத்து வெளியிட்டதும் மத்தியப் படைகள் வந்துதான் கலவரத்தை அடக்க முடிந்தது என்பதும் கருணாநிதியின் இயலாமையைக் காட்டியதோடு முஸ்லிம்களின் வெறுப்பையும் தேடித்தந்தது.

தொடர்ந்து நடந்த கோவைக் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து இந்துக்களின் ஆதரவைக் கருணாநிதி இழந்தார்; அதுபோன்றே குற்றத்தில் தொடர்புடையவர்களைத் தேடுவதற்காகக் காவல்துறை தமிழகமெங்கும் செய்த அத்துமீறல்களும் கருணாநிதி பா.ஜ.கவுடன் கூட்டணி உறவு கொண்டதும்  முஸ்லிம்களை அவருக்கு எதிராகத் திருப்பின.

த.மா.கா, காங்கிரஸ், பாமக, இரு கம்யூனிஸ்ட்கள், மதசார்பற்ற ஜனதா தளம், இ.தே.லீக், பா.பி மற்றும் பல சிறிய கட்சிகளையும் இணைத்து மகா கூட்டணி அமைத்து ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்தார். ஜெயலலிதா டான்சி நில வழக்கில் மூன்றாண்டு சிறைத் தண்டனை பெற்றிருந்ததாலும் ஒரே நேரத்தில் நான்கு தொகுதிகளில் போட்டியிட மனுச் செய்திருந்ததாலும் 2001 தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் தமிழ்நாட்டு ஆளுநராக இருந்த ஃபாத்திமா பீவியால் தமிழக முதல்வராகப் பதவியில் அமர்த்தப்பட்ட ஜெயலலிதா உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பதவி விலகி, முதன்முதலாகச் சட்டமன்றத்தை மிதித்த பன்னீர்செல்வத்தைத் தமிழக முதல்வராக்கினார். தம் மீதான வழக்கில் இருந்து விடுதலை பெற்றபின் ஆண்டிப்பட்டியில் சட்டமன்ற உறுப்பினரைப் பதவி விலகச் செய்து அவ்விடத்தில் போட்டியிட்டு வென்று  மீண்டும் முதல்வராக அமர்ந்தார் ஜெயலலிதா.

ஜெயலலிதா தம் இரண்டாம் ஆட்சிக்காலத்தில், அரசு ஊழியர் போராட்டத்தை முரட்டுத்தனமாக அடக்கியதும் மதமாற்றத்தடைச் சட்டம் கொண்டு வந்ததும் கோயில்களில் ஆடு, மாடு, கோழி போன்றவற்றைப் பலியிடத் தடை விதித்ததும் பல தரப்பு மக்களிடமிருந்தும் எதிர்ப்பலையை உருவாக்கியது.

கூடவே கருணாநிதி, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து உருவாக்கிய வலிமையான கூட்டணியும்  விஜயகாந்தின் தே.மு.தி.க தனியாகப் போட்டியிட்டதில் தி.மு.க எதிர்ப்பு வாக்குகள் அ.இ அ. தி.மு.கவிற்குச் செல்லாமல் தே.மு.தி.கவிற்குப் போனதும் சேர்ந்து ஜெயலலிதாவின் ஆட்சியை அகற்றிக் கருணாநிதியை மீண்டும் தமிழக முதல்வராக்கின.

இப்போது எதிர்வரும் தேர்தலில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வர முடியுமா?

கருணாநிதியின் நடப்பு ஆட்சியில் பெரிதாகக் குறைகூறும் அளவுக்கு மக்களுக்குப் பிரச்சனைகள் இல்லை. ஒரு ரூபாய் விலையில் ஒரு கிலோ அரிசி, இலவச வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டி, 108 ஆம்புலன்ஸ் திட்டம், உயிர்காக்கும் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் எனப்பலவும் ஏழை , நடுத்தர மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. துணை முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகளும் ஜெயலலிதாவிற்கு நேர்மாறான அவரின் எளிமையான அணுகுமுறைகளும் மக்களுக்குப் பிடித்துள்ளன.

தலைவி கொடநாட்டிலோ சிறுதாவூரிலோ முடங்கிப்போயுள்ளதைப்போல எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.கவும் முடங்கிக் கிடக்கிறது. மக்கள் பிரச்சனைகளுக்காகப் பொதுமன்றத்திலோ சட்டமன்றத்திலோ போராடும் வாய்ப்பையும் அக்கட்சி இழந்துள்ளது. ஆட்சியை இழந்தும் நெருக்கடி நிலைக்காலக் கொடுமைகளுக்குள்ளாகியும் கூட, தி.மு.க எனும் கனலை அணையாமல் காத்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்கக் கருணாநிதி உழைத்ததில் பத்தில் ஒரு பங்கு செயல்பாட்டைக்கூட ஜெயலலிதா காட்டவில்லை. கோவையிலும் திருச்சியிலும் கூடிய கூட்டத்தைப்  பார்த்து  ஜெயலலிதா மகிழ்ந்து நம்பிக்கை கொண்டால்...,  நீண்ட நாட்களுக்குப் பின் ஜெயலலிதாவைக் காணக் கட்சிக்காரர்களும் பொதுமக்களும் வந்ததை வைத்துத் தமக்குப் பேராதரவு இருப்பதாக  நினைத்துவிட்டால் அது அரசியல் சிறுபிள்ளைத்தனமாகும். தி.மு.க ஆட்சியில் பெருந்தலைவர் காமராஜருக்கும் எம்.ஜி.ஆர் ஆட்சியில் கருணாநிதிக்கும் இதைவிடப் பெரும் கூட்டம் கூடியிருந்தது என்பதை யாராவது ஜெயலலிதாவுக்கு நினைவூட்டினால் நல்லது.

"நீங்கள் விரும்பும் நல்ல கூட்டணி அமையும்" என ஜெயலலிதா சொன்னதைக் காங்கிரஸுடனான கூட்டணி எனச் சிலர் வியாக்கியானம் செய்கின்றனர். இப்போதுள்ள தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி வலுவானதாகும். ராகுல் காந்திக்குத் தி.மு.க வின் பிடியில் இருந்து காங்கிரஸை விடுவிக்கும் எண்ணம் இருப்பதாகப் பரவலாகப் பேசப்பட்டாலும் கட்சித் தலைவி சோனியாவோ பிரதமர் மன்மோகன் சிங்கோ இதுவரை இக்கூட்டணிக்கு எதிராக எதுவும் கூறவில்லை. முதல்வர் கருணாநிதியுடனான டாக்டர் ராமதாஸின் அண்மைய சந்திப்பு, மீண்டும் பா.ம.க வை,தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்குள் கொண்டு வந்து விட்டால் அ.இ.அ.தி.மு.க வரும் தேர்தலில் வெல்வது என்பது கனவாகவே முடியும்.

ஒருவேளை வியாக்கியானிகள் சொன்னதுபோல்க் காங்கிரஸுடன் அ.இ.அ.தி.மு.க  கூட்டணி உறவு கொண்டால், கதவருகே காத்து நிற்கும் ராமதாஸும் ஒட்டிக் கொள்ளலாம். ஆனால், இலங்கைத் தமிழர் பிரச்சனையைக் காரணம் காட்டிக் கூட்டணியில் இருந்து  வை.கோ வெளியேறலாம். காங்கிரஸை எதிர்க்கும்  இரு கம்யூனிஸ்ட்களும் வெளியேறலாம்.  இதை ஈடுகட்ட ஜெயலலிதா விஜயகாந்தையும் தம்மோடு சேர்த்தால் ராமதாஸ் வெளியேறவேண்டி வரும்.

பழைய அனுபவங்களிலிருந்து பாடம் படித்த காங்கிரஸ் ஜெயலலிதாவுடன் கூட்டணிக்கு ஒப்புக் கொள்ளாது என்று வைத்துக் கொள்வோம். ஜெயலலிதா  உப்பரிகையிலிருந்து இறங்கி வந்து, புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ண சாமியைச் சந்தித்ததுபோல, விஜயகாந்தையும்  சந்தித்துத் தம் கூட்டணியோடு சேர்த்துக் கொண்டால்......... இரு கம்யூனிஸ்ட்களையும் தம்மோடு இருக்கும் ம.தி.மு.க வையும் சேர்த்து 2001 ஆம் ஆண்டில் அமைத்த மெகா கூட்டணிபோல ஒன்றை உருவாக்கினால்.... ஒருவேளை தி.மு.க காங்கிரஸ் கூட்டணியை மிரள வைக்க முடியும். ஆனால்  அ.இ.அ.தி.மு.க வின் பக்கம் போவதற்கு விஜயகாந்தை ஆளும்கட்சியான காங்கிரஸ் அனுமதிக்காது.

தி.மு.க கூட்டணியில் இருந்து விலகி, காங்கிரஸ் முயன்று விஜயகாந்தையும் ராமதாஸையும் சேர்த்துக் கொண்டு புதிய கூட்டணி கண்டால்கூட, அது  கனவு காணும் காமராஜர் ஆட்சியைத் தமிழகத்தில் அமைக்க முடியாது.

காங்கிரஸ் தனி அணி காணும் பட்சத்தில் மும்முனைப் போட்டி வந்து யாருக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கும் நிலை வந்தால், கடந்தகால அனுபவங்களை வைத்து காங்கிரஸ் அ.இ.அ.தி.மு.க அணியோடு சேர்ந்து ஆட்சி அமைப்பதை விட, தி.மு.க அணியோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடியும். அப்போது தமிழகத்தில் ஆட்சியில் பங்கு என்ற அக்கட்சியின் ஆசையும் நிறைவேறலாம்.

உடனடியாக மக்களின் மனதைப் பாதிக்கும், "சாவுக்கொரு ஓட்டு; நோவுக்கொரு ஓட்டு" போன்ற எந்த அனுதாப அலைகளும் வீசாமல் இருந்தால், இப்போதுள்ள கூட்டணி பலத்தில் வரும் தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் அ.இ.அ.தி.மு.க ஆட்சியைப் பிடிப்பது என்பது கேள்விக்குறியே!

சனி, 9 அக்டோபர், 2010

வரும் தேர்தலில் அ இ அ தி மு க ஆட்சியைப் பிடிக்குமா? (பகுதி-2)

எம்ஜிஆர் தனிக்கட்சி துவங்கினாலும் அதை  மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் துணை நின்றவர் காம்ரேட் கல்யாணசுந்தரம் ஆவார்.  ஆட்சியில் இருந்த  கருணாநிதி, அ தி மு கவை, காங்கிரஸ் கட்சியுடன் இணைவதற்காக ஓர் இடைக்காலத் தங்குமிடம் எனும் பொருளில், 'ஒட்டுகாங்கிரஸ்' என்றே அழைத்து வந்தார். தனிக்கட்சியின் மக்கள் ஆதரவை அறிந்து கொள்ளவும் தம் செல்வாக்கைக் கருணாநிதிக்கு  நிரூபிக்கவும் எம் ஜி ஆருக்கு ஒரு வாய்ப்பாக வந்தது திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல்.

மக்களவையில் தி மு க வின் உறுப்பினராக இருந்த ராஜாங்கம் இறந்து விட்டதைத் தொடர்ந்து 1973 ஆம் ஆண்டு மே 21ஆம் நாள் நடந்த தேர்தலில் எம் ஜி ஆர் நிறுத்திய அ தி மு க வேட்பாளர் மாயத்தேவர்  2,60,930 வாக்குகள்  பெற்று வெற்றி பெற்றார். எம் ஜி ஆருக்குத் தம் செல்வாக்கின் மீது நம்பிக்கை வந்தது. அடுத்து, காம்ரேட் பாலதண்டாயுதம் விமான விபத்தில் இறந்ததால் கோவை நாடாளுமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் வலது கம்யூனிஸ்ட் வேட்பாளார் பார்வதிகிருஷ்ணனை வெற்றிபெறச் செய்ததால் எம் ஜி ஆரின் அரசியல் செல்வாக்கு மேலும் உறுதிப்படுத்தப்பட்டது. 1974 ஆமாண்டு நடந்த பாண்டிச்சேரி மக்களவைத் தேர்தலிலும்  அதிமுக வேட்பாளர் பாலா பழனூர் வெற்றி பெற்றார். எம் ஜி ஆருக்கும் அவரது கட்சிக்கும் மக்கள் அளித்த ஆதரவும் அவர் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையும் நிரூபிக்கப்பட்டன. 1977 சட்டமன்றப் பொதுத் தேர்தலில், வலது கம்யூனிஸ்ட், இந்திரா காங்கிரஸ் கூட்டணியுடன் எளிதாக ஆட்சியைப் பிடித்தார்.

எம் ஜி ஆருடன் கதாநாகியாகத் திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமின்றி, அவருடன் நெருங்கிய தொடர்பும் வைத்திருந்த ஜெயலலிதா, எம் ஜி ஆர் ஆட்சியைப் பிடித்த ஐந்தாண்டுகளுக்குப் பின் அ.தி.மு.கவில் தம்மை இணைத்துக் கொண்டார். ஓராண்டு நிறையும் முன்பே -1983 ஜனுவரியில்- கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக எம் ஜி ஆரால் நியமிக்கப்பட்ட ஜெயலலிதா அடுத்த ஆண்டே நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக்கப்பட்டார்.

எம் ஜி ஆர் நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெறும்போது நடைபெற்ற 1984 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா அ தி மு கவுக்காகப் பிரச்சாரம் செய்த போதும் ஆர் எம் வீரப்பன், பொன்னையன், காளிமுத்து, முத்துசாமி போன்ற கட்சியின் மூத்த தலைவர்கள் ஜெயலலிதாவை ஏற்றுக் கொள்ளவில்லை. சேலம் கண்ணன், திருநாவுக்கரசு, சாத்தூர் ராமச்சந்திரன், கருப்பசாமிப் பாண்டியன் போன்றோர் ஜெயலலிதாவுக்குத் துணைநின்றனர். பிரதமராக இருந்த இந்திராகாந்தியின் படுகொலை நிகழ்ந்த காலகட்டத்தில் நடந்த அத்தேர்தலில் இந்திரா காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருந்த அ தி மு க வென்று எம் ஜி ஆர் மீண்டும் முதல்வரானார்.

எம் ஜி ஆர் நோயுடன் போராடிக்கொண்டிருந்தாலும் 1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறப்பதுவரை அவரே தமிழக முதல்வராக இருந்தார்.

தாமும் சேர்ந்து உழைத்து, வளர்த்து ஆட்சியில் அமர்த்திய ஒரு கட்சியில் இருந்து நீக்கப்பட்டு ஐந்து நாட்களுக்குள் தனிக்கட்சி உருவாக்கி ஓராண்டுக்குள் தேர்தலில் வென்று, ஐந்தாண்டுகளில் ஆட்சியையும் பிடித்த எம் ஜி ஆரின் சாதனைக்குத் துணை நின்றது எம் ஜி ஆரின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையே!

அந்த மக்கள் நம்பிக்கை எம் ஜி ஆரின் வாரிசாகக் கட்சியையும்  ஆட்சியையும் பிடித்த ஜெயலலிதாவின்மேல் இருக்கிறதா?

எம் ஜி ஆரின் மறைவைத் தொடர்ந்து, அவரின் மனைவி ஜானகி தமிழக முதல்வரானதும் அ இ அ தி மு க ஜா அணி, ஜெ அணி எனப்பிரிந்ததும், 1988 ஆம் ஆண்டு ஜானகியின் ஆட்சி கலைக்கப்பட்டதும் சரியாக அடுத்த ஓராண்டில் கருணாநிதி தலைமையில் தி.மு.க ஆட்சியைப் பிடித்ததும் விரைவாகவே நடந்தேறின.

எம் ஜி ஆர் உருவாக்கிய கட்சியின் வெற்றிச் சின்னமான இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டு, சேவல், இரட்டைப்புறா என இரு சின்னங்களில் ஜெ அணியும் ஜா அணியும் போட்டியிட்டதால் கருணாநிதி எளிதாக ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. ஜெயலலிதா சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு இரு அணிகளும் இணைந்தன. கட்சியில் பொதுச்செயலாளராகவும் சட்டமன்றத்தில்  எதிர்க்கட்சித் தலைவராகவும் ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அப்போது ஜெயலலிதாவால் எழுதப்பட்டது என நம்பப்பட்ட பதவி விலகல் கடித நகலை முதல்வர் கருணாநிதி வெளியிட்டார். உண்மையிலேயே அரசியலை விட்டு ஒதுங்கும் ஆர்வம் இருந்திருந்தால்கூட இயல்பிலேயே பிடிவாத குணமும் மோதிப்பார்க்கும் தீவிரமும் கொண்ட ஜெயலலிதா, இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டார். அப்போதிலிருந்து  அரசியலையும் தாண்டிக் கருணாநிதியைத் தமது எதிரியாகக் கொண்டார்.

1989 மார்ச் 25 ஆம் தேதி சட்டசபையில் கருணாநிதி பட்ஜெட் தாக்கல் செய்தபோது அவரது கையில் இருந்து பட்ஜெட் உரை பறிக்கப்பட்டது. சபையில்  பெரும் கலவரம் ஏற்பட்டது. ஜெயலலிதா தாக்கப்பட்டதாகவும் அவரது சேலையை உருவ முயன்றதாகவும்கூட அப்போது அ தி மு க வினரால் புகார் கூறப்பட்டது. ''இனிமேல் சட்டசபை கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டேன்; தமிழ்நாட்டின் முதல்வராகத்தான் சபையில் நுழைவேன்'' எனச் சபதம் செய்து, 1991ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத்  தேர்தலில் வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வரானார்.

கருணாநிதி செய்த இரண்டாவது தவறின் விளைவு இது.

எம் ஜி ஆரைக் கட்சியில் இருந்து நீக்கிய முதல் தவறைக் கட்சியின் மூத்த தலைவர்களின் ஆலோசனையோடும் செயற்குழு, பொதுக்குழு ஆகியவற்றின் ஒப்புதலோடும் செய்த கருணாநிதி, ஜெயலலிதாவின் பதவி விலகல் கடிதத்தை வெளியிட்ட இரண்டாவது தவறைத் தாமாகவே செய்தார்.

தமிழக மக்கள் எம் ஜி ஆரின் மீது வைத்திருந்த அளவு நம்பிக்கையை ஜெயலலிதா மீது வைத்திருந்ததால் அவர் தமிழக முதல்வரானார்  என்று பொருள்கொள்ளக் கூடாது.

மத்திய அரசு தந்த உளவுத் தகவல்கள் விடுதலைப்புலிகளுக்குத் தரப்பட்டது என்ற புகாரின் பேரில், மாநில ஆளுநரின் அறிக்கையின்றியே 1989 ஆம் ஆண்டு அமைந்த கருணாநிதியின் ஆட்சி அப்போதைய பிரதமர் சந்திரசேகரால் 1991 ஆம் ஆண்டில் கலைக்கப்பட்டது.

அவ்வாண்டில் நடந்த பொதுத்தேர்தல் பிரச்சாரத்துக்காக வந்த ராஜீவ் காந்தி தமிழக மண்ணில் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட அனுதாப அலையில் அதிமுக காங்கிரஸ் கூட்டணி வென்று ஜெயலலிதா முதல்வரானார்.

எம்ஜிஆரின் பெயரும் இரட்டை இலைச் சின்னமும் ராஜீவ் மரணமும் ஒன்றுபட்ட அ.இ அ.தி.மு.கவும் சேர்ந்து உருவாக்கிய சூழ்நிலையால் முதல்வரான ஜெயலலிதா மக்களிடமிருந்து விலகியே இருந்தார். முதல்வரைச் சக அமைச்சர்கள் சந்திக்க முடியாது; பொதுச்செயலாளரான அவரைக் கட்சித்தலைவர்கள் சந்திக்க முடியாது. கட்சியிலும் அரசியலிலும் அவரை விடவும் மூத்தவர்களும் கூட காக்க வைக்கப்பட்டனர். முதல்வர் சாலையில் வருவதற்கு முன்பே மணிக்கணக்கில் பொதுமக்கள் தங்கள் பணிகளுக்குச் செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர். அமைச்சர்களும் கட்சிக்காரர்களும் காலில் விழவைக்கப்பட்டனர். அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல வளர்ப்பு மகனின் ஆடம்பரத் திருமணம் நடந்தது. மக்களின் மவுனப்புரட்சியால் அ இ அ தி.மு,க அடுத்துவந்த 1996 தேர்தலில் ஆட்சியை இழந்ததோடு ஜெயலலிதாவும் தோற்றுப்போனார்.

தொடக்கம் (தொடர்கிறது ...)

சனி, 2 அக்டோபர், 2010

வரும் தேர்தலில் அ இ அ தி மு க ஆட்சியைப் பிடிக்குமா? (பகுதி-1)

சென்னை ராஜதானியில் இருந்து மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட இன்றைய  தமிழ்நாட்டின் பதின்மூன்றாவது சட்டசபைக்கான தேர்தல் வரும் 2011 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவியில் அமர்ந்திருந்த கருணாநிதி மீண்டும் முதல்வர் ஆவாரா அல்லது ஸ்டாலினுக்கு வழிவிட்டு ஓய்வு பெறுவாரா; இரு முறை முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தம் உறக்கத்தைக் கலைத்து மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவாரா என்ற ஆவல் நிறைந்த எதிர்பர்ப்பும் ஊகங்களும் தமிழ்நாட்டில் அரசியல்கட்சித் தொண்டர்களிடமும் பொதுமக்களிடமும் நிறைந்துள்ளன.

கருணாநிதி தம் அரசியல் வாழ்வில் செய்துவிட்ட திருத்தவே முடியாத இரு தவறுகளின் விளைவை நன்றாக அனுபவித்துவிட்டார்.

ஒன்று:-- எம் ஜி ஆரைத் தி மு கவிலிருந்து வெளியேற்றியது.

இரண்டு:-- ஜெயலலிதாவால் எழுதப்பட்டதாக நம்பப்பட்ட ராஜினாமாக் கடிதத்தை வெளியிட்டது.

அதன் விளைவு தான் அ.இ.அ.தி.மு.க.

எம் ஜி ஆர் தி மு கவிலிருந்து வெளியேற்றப்பட்டதும்  உடனேயே அவர் தனிக்கட்சி தொடங்கியதும் சட்டென நிகழ்ந்துவிட்டவை போலத் தோன்றினாலும் அவற்றிற்கு முன்னும் பின்னும் நிகழ்ந்தவை ஒரு தேர்ந்த திரைக்கதையின் கட்டமைப்பையும் விறுவிறுப்பையும் ஒத்தனவாகும்.
அண்ணாதுரையின் மறைவைத் தொடர்ந்து 1969 ஆம் ஆண்டில் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற கருணாநிதி, இரு ஆண்டுகளுக்குள் கட்சியையும் ஆட்சியையும் தம் இறுக்கமான பிடிக்குள் கொண்டு வந்தார். 1969 ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலை ஒட்டி எழுந்த பிரச்சனையில் இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிளந்தது. இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்தியின் தலைமையின் கீழ் இருந்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கண்ட கருணாநிதி, 1971 ஆம் ஆண்டில், தமிழகச்  சட்டமன்றத்தின் ஆயுள்  முடிவதற்கு ஓராண்டிற்கு முன்னரே அதைக் கலைத்துவிட்டுத் தேர்தலைச் சந்தித்தார். 1967 ஆம் ஆண்டில் முதன்முதலாக ஆட்சியைப் பிடித்த தேர்தலில் 138 இடங்களைப் பெற்ற தி மு க, இத்தேர்தலில் 183 இடங்களைப் பெற்றது. கருணாநிதி ஆட்சியையும் கட்சியையும் ஒருசேரக் கைக்குள் கொண்டு வந்து தன்னிகரில்லாத் தலைவரானார்.

அதனால் ஏற்பட்ட இறுமாப்போ என்னவோ கட்சியில் தமக்கு நிகரான செல்வாக்குப் பெற்றிருந்த எம் ஜி ஆருடனும் கூட்டணிக் கட்சித் தலைவியான இந்திராகாந்தியுடனும் நெருக்கத்தைக் குறைத்துக் கொண்டு இடைவெளியைக் கூட்டினார். கட்சியில் எம் ஜி ஆரின் செல்வாக்கைக் குறைப்பதற்காக எம் ஜி ஆர் மன்றங்களைக் கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு முயன்றார். இதனால் உசுப்பேற்றப் பட்ட எம் ஜி ஆர்  தம் செல்வாக்கைக் காட்டுவதற்கு  வாய்ப்பாகக் கட்சி மாநாடு ஒன்று வந்தது. அம்மாநாட்டில் கருணாநிதி பேசிக்கொண்டிருக்கும்போது எம் ஜி ஆர் மாநட்டு அரங்கிற்குள் நுழைந்தார். மொத்த மாநாடும் எம் ஜி ஆரின் நுழைவால் கவரப்பட, தம் உரையைப் புறக்கணிக்கும் அளவு அங்கு ஏற்பட்ட சலசலப்பால் கருணாநிதிக்கு நெஞ்சுவலியே வந்துவிட்டது.

இதனிடையே கருணாநிதியின் மகன் மு.க. முத்து நடித்த "பிள்ளையோபிள்ளை" திரைப்படம் வெளிவந்தது. முத்து ரசிகர்மன்றங்களும் கருணாநிதியின் ஆசியோடு துவங்கப் பட்டன. எம் ஜி ஆருக்குப் போட்டியா? என அவரின் ரசிகர்கள் குமுறினர். மு.க. முத்துவிற்கு ஏற்பட்ட கடும் எதிர்ப்பைக் கண்டு வெலவெலத்துப்போன கருணாநிதி, "பாவம் அவன் இளந்தளிர்; அவனை விட்டு விடுங்கள்" எனக் கெஞ்சும் நிலை வந்தது.

இந்நிலையில் மத்திய அரசோடு மோதிய கருணாநிதி இந்திராகாந்தியோடும் காங்கிரஸ் கட்சியோடும் உள்ள உறவு முறிந்தது என அறிவித்தார். நாடு முழுவதில் இருந்தும் கிடைக்கும் உளவு மற்றும் புலனாய்வுத் தகவல்களை அன்றாடம் பெறும் வாய்ப்புள்ள இடத்தில் இருந்த பரம்பரை அரசியல்வாதியான இந்திரா காந்தி, எம் ஜி ஆருக்கும் கருணாநிதிக்கும் இடையே இருந்த மோதலை ஆயுதமாக்கிக் கருணாநிதிக்குப் பாடம் புகட்ட விரும்பினார். உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத் தயாரிப்புக்கெனப் பல வெளிநாடுகளுக்கும் சென்று வந்த எம் ஜி ஆரின் அந்நியச்செலாவணிப் பரிமாற்றம் எனும் அரத்தினால் மோதலைக் கூர்மைப்படுத்தினார் இந்திரா. அவர் எதிர்பார்த்ததைவிட எம் ஜி ஆர் மிக வேகமாக இருந்தார்.

அன்றைய காலகட்டத்தில் மிக வெளிப்படையாகப் பொதுமக்களாலும் பத்திரிகைகளாலும் பேசப்பட்ட, ஆளும் கட்சியான தி மு கவின் ஊழல் குறித்து, அக்கட்சியின் பொருளாளரான எம் ஜி ஆர் வினா எழுப்பினார். செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த  பொதுக்கூட்டத்தில் கட்சியின் வட்டம், மாவட்டம் தொடங்கிச் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உட்பட அனைவரின் சொத்துக் கணக்கு விபரங்களைக் கேட்டார். கட்சி அதிர்ச்சியடைந்தது. இரண்டு நாட்களுக்குப்பின் 1972 அக்டோபர் பத்தாம்நாள் கூடிய தி மு கவின் செயற்குழுவிலும் பொதுக்குழுவிலும் இது விவாதிக்கப்பட்டு, கட்சிக்கட்டுப்பாடை மீறிய எம் ஜி ஆரைத் தற்காலிகமாகக் கட்சியில் இருந்து நீக்குவதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  பதினான்காம் தேதி கூடிய செயற்குழு எம் ஜி ஆரை நிரந்தரமாகக் கட்சியில் இருந்து நீக்கியது. செயற்குழு, பொதுக்குழுவில் இருந்தோரில் நடிகர் எஸ் எஸ் ஆர் போன்ற ஓரிருவரைத் தவிரப் பின்னாளில் எம் ஜி ஆருடன் வந்து ஒட்டிக்கொண்ட எவருமே அத்தீர்மானத்தை எதிர்க்கவில்லை என்பதோடு அவரை நீக்குவதற்கு முழு ஆதரவும் கொடுத்தனர் என்பது கட்சியில் கருணாநிதிக்கிருந்த ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது.

தாம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செய்தி கிடைக்கும்போது எம் ஜிஆர் சத்யா ஸ்டூடியோவில் சினிமாப் படப்பிடிப்பில் இருந்தார். எதிர்காலம் பற்றிய எந்தத் திட்டமிடலும் உடனடியாக அவரிடம் இல்லை. தி மு கவிலிருந்து  எம் ஜி ஆர் நீக்கப்பட்ட உடன்  தமிழ்நாட்டில் பல இடங்களிலும் அவரது ரசிகர் மன்றத்தினர் "தாமரை"க் கொடி ஏற்றினர். நாகர்கோவிலில் தமிழ்மகன் உசேன், ஸ்ரீவில்லிப்புத்தூரில் தாமரைக்கனி போன்றோர் இவர்களுள் முக்கியமானவர்கள் ஆவர். தமிழகமெங்கும் இருந்த அவரது ரசிகர்களும் ஆதரவாளர்களும் ஆயிரக்கணக்கில் சென்னையில் கூடினர்.

மக்களின் ஆர்வமும் ஆதரவும் அவருக்குக் கூடிக்கொண்டே வந்தன. அன்று சொல்லிக்கொள்ளும்படியான ஸர்குலேஷன் இல்லாத, காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸை ஆதரித்து எழுதும் பத்திரிகையான தினமலர் முதல் பக்கத்தில் எம் ஜி ஆரின் முழு அளவு படங்களுடன் எம் ஜிஆர் பற்றிய செய்திகளைத் தந்து தனது ஸர்குலேஷனை நூறுமடங்கு அதிகரித்துத் தன்னை வளர்த்துக்கொண்டது.

வலதுகம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலச் செயலாளராயிருந்த காம்ரேட்  எம்.கல்யாணசுந்தரம் எம் ஜி ஆரின் அரசியல் ஆலோசகரானார். 1972 அக்டோபர் 17 ஆம்தேதி எம் ஜி ஆர் "அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" எனத் தனிக்கட்சி தொடங்கினார்.

வேலூர் நாராயணன் நடத்திவந்த 'அலைஓசை' இதழ் அ தி மு கவின் செய்திகளைத் தந்து அக்கட்சி வளர்வதற்குப் பெரிதும் துணை நின்றது.

1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி இந்திராகாந்தியால் இந்தியாவில் நெருக்கடிநிலை பிறப்பிக்கப்பட்டது.  உலக அரசியலில் சோவியத் யூனியனை ஆதரித்தவர்  இந்திராகாந்தி. எனவே வலது கம்யூனிஸ்ட்கள் இந்திராவையும் நெருக்கடி நிலையையும் ஆதரித்தனர். தமிழ்நாட்டில் வலது கம்யூனிஸ்ட்களுடன் இருந்த எம் ஜி ஆரும் அப்படியே அதை ஆதரித்தார். கருணாநிதி அதை வன்மையாக எதிர்த்தார். அதனால் தம் ஆட்சியையும் இழந்தார். கொடுமையான மிசா சட்டத்தின் கீழ் தி மு க வின் முன்னணித் தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டுக் கொடுமைப்படுத்தப் பட்டனர். தி மு க நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சிட்டிபாபுவும் சாத்தூர் பாலகிருஷ்ணனும் சென்னை மத்திய சிறையில் மிசாக்கொடுமையால் உயிர் இழந்தனர். தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டது.

1977 ஆம் ஆண்டு  ஜூன்மாதம் நடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அ தி மு க வென்று எம் ஜி ஆர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார்.

அதன் பிறகு நடந்த இரு தேர்தல்களிலும் அவரே முதல்வரானார். அவர் நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவின் புரூக்ளின் மருத்துவமனையில் இருந்தபோது நடந்த தேர்தலில் கருணாநிதி எப்படியாவது தாம் தமிழக முதல்வராக வேண்டும் என மக்களிடம், "இத்தனை  ஆண்டுகள் என்னை முதல்வர் பதவியில் இருந்து விலக்கி வைத்து தண்டித்தது போதாதா?" என்று கேவலமாக இரந்து வேண்டியும் - "என் நண்பர் எம் ஜி ஆர் உடல் நலத்துடன் மீண்டு வந்ததும் அவரிடமே முதலமைச்சர் பதவியை ஒப்படைப்பேன்" என்று நைச்சியமாகப் பேசியும் கெஞ்சியும் எம் ஜி ஆரின் மரணம் வரை அது நடைபெறவில்லை. கை எட்டும் தொலைவில் இருந்த முதலமைச்சர் நாற்காலியில் மீண்டும் அமர்வதற்குக் கருணாநிதிக்குப் பதின்மூன்று ஆண்டுகள் அரசியல் பயணம் செய்யவேண்டி இருந்தது.

(தொடர்கிறது ...)